Ad Widget

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு வேட்பாளராகவே சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என கட்சியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்“.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் தீர்மானத்தையும் மதிக்காமல் மத்திய குழு தேவை இல்லையென இருந்துவிட்டு தங்கள் முகமூடிகள் எல்லாம் பறந்து போயுள்ள நிலையில், அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என்பதை அனைவருமே வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மாநகரசபையில் தமிழினப் படுகொலை செய்ய பங்காளிகளாக இருந்த ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பதவிக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு இணைந்து செயற்படுவதால் இவர்கள் யார் என்று தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தைப் புனரமைத்து சிங்கள தேசியவாத வளர்ச்சிக்கும் இவர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர். அவரது வெளிநாட்டுப் பயணமும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தமிழ் தேசிய முலாம் பூசி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு காலமும் மறந்து போய் அதை தூசு தட்டமுற்படுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர் உருவாக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்கள் சட்ட மாணவர்களாக இருந்த போது இந்த கட்சியை உருவாக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மறைந்த பேராசிரியர் கென்னடி ஆகிய நான்கு பேருமே ஆகும்.

கட்சியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. அந்த நேரத்தில் ஒரு வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் .“ எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts