தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக டக்ளஸ், சங்கரி கூட்டணி ஆரம்பிக்கின்றனராம்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பில் ஆனந்தசங்கரி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஈரோஸ் கட்சியின் தலைவர் பிரபாகரன் உட்பட வேறு சில கட்சிப் பிரதிநிதிகளும் பங்குபற்றினர் எனத் தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுக் கூட்டணி ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியைச் சேர்ந்தவருமான வரதராஜப் பெருமாளும் பங்கேற்க இருந்தார் எனக் கூறப்பட்டபோதிலும் இறுதியில் அவர் கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் மீண்டும் வரும் 8 ஆம் திகதி ஒன்றுகூடி அடுத்த நகர்வு பற்றிப் பேசுவர் எனத்தெரிகிறது. இதன்போது முன்னாள் முதலமைச்சர் வரதாரஜப் பெருமாள் மற்றும் தமிழர் மகா சபையின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட வேறு சில கட்சிகளின் பிரதிநிதிகளையும் பங்கேற்க வைக்க முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன எனக் கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் உருவாக்கப்பட்டபோது அதன் தலைவராக வீ.ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவரின் நடவடிக்கைகளால் தலைமைப் பதவியை இழந்திருந்தார். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிப் பெயரையும் சின்னத்தையும் நீதிமன்றம் ஊடாகப் பறித்தெடுத்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் அவர் படுதோல்வியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts