Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையினருடன் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது.

cm-vicky-london

இந்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள் பங்கேற்றன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு நிலைமைகள், இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேறிய மக்களின் நிலைமைகள், விடுவிக்கப்பட்ட பகுதிகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.

இது விடயமாக அங்குள்ள மக்களுக்கு உதவிகளை நேரடியாகவோ அல்லது அமைப்புக்களின் ஊடாகவோ வழங்குவது பற்றியும் சிறியளவிலான முதலீடுகளை செய்வது தொடர்பிலும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதோடு, பெரியளவிலான முதலீடுகளை தற்போதைய நிலையில் தவிர்த்துக் கொள்வது பற்றியும் ஆழமாக ஆராயப்பட்டது.

அத்துடன் வட பகுதியின் கல்வி மேம்பாடு குறித்து இச்சந்திப்பின்போது மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டதோடு, அதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

மற்றும் வட பகுதியின் கலாசார சீர்கேடுகள் பற்றி அக்கறையுடன் கருத்துக்கள் பகிரப்பட்டதோடு அதனைத் தடுப்பதற்கு என்னவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் பேசப்பட்டது.

இதன்போ மாணவர்கள் மத்தியில் மது, போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பில் முதலமைச்சர் பெரிதும் கவலை தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை, முதலமைச்சர்தான் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்று முன்பு கூறியதாக கருத்தொன்று நிலவியது பற்றியும், இதன்போது ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை ஒரு பொதுவான ஆளாகவே பார்ப்பதாகவும் நீங்கள் ஒரு கட்சி சார்ந்து நிற்கக்கூடாது என்றும் கூறிய விடயம் பற்றியும் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண சபையில் ஏனைய அங்கத்தவர்களுடனான உங்களது உறவு இப்போது எவ்வாறுள்ளது என்று கேட்டபோது:-

தான் தமிழரசுக் கட்சியை மாத்திரம் சார்ந்த நிற்காது எல்லோருக்குமே பொதுவானவராகவே செயற்படுவதாகவும் எல்லாக் கட்சிகளின் விருப்பின்பேரில்தான் தான் முதலமைச்சராக வந்ததாகவும் அதற்கேற்றவாறு தான் ஒரு கட்சியைச் சார்நதவன் அல்ல பொதுவானவராகவே செயற்படுகின்றேன் என்று முதலமைச்சர் கூறினார்.

Related Posts