Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வு செயற்றிட்டத்தின்கீழ் தொடர்ந்தும் இயங்கும்!

தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும். இதற்கென புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன்.

SURESH_PREMACHANDR

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள நெருக்கடிகள், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

நேற்றய கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி சார்பாக க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், க.சர்வேஸ்வரன், துரைரட்ணசிங்கம் ஆகியோரும் தமிழரசுக்கட்சி சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், சிறிகாந்தா ஆகியோரும் புளொட் சார்பில் ஆர்.ராகவனும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இயங்கும். புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் நான்கு கட்சிகளும் செயற்படுவது என்றும், கட்சியை பதிவு செய்வது குறித்தும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், புதிய செயற்றிட்டத்தை உருவாக்குவது குறித்தும் எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதென்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.- என்றார் அவர்.

Related Posts