Ad Widget

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா அடையாள உண்ணாவிரதத்தில் பெருந்திரலானோர் பங்கேற்பு:-

இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று 24.05.2012 அன்று அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று காணாமல் போனோர், தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்றவர்களின் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ்.க.பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், இ.சரவணபவன் ஆகியோரும் மற்றும் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த அனைத்து உள்ளுராட்சி அமைப்புக்களின் தலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்;த்தன் ஆகியோரும் மற்றும் மனோ கணேசன், சிறீரங்கா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு முரளீதரன் (43), முரளீதரன் கிருஷ்ணகுமாரி, முரளீதரன் சாருஜன் (7), அபிதா(5) ஆகியோர் முல்லைத்தீவு செல்வபுரத்தில் வைத்து 18.05.2009 அன்று இராணுவப் பேருந்தில் ஏற்றியதை நேரில் கண்ட சாட்சியான அவரது உறவினர் காணாமல் போனோரின் புகைப்படத்துடன் கண்ணீர்விட்டு அழுதது அனைவரது நெஞ்சையும் நெகிழ்வித்தது. காணாமல் போனோரின் இன்றைய வயது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 25.05.2006 அன்று துணுக்காய் பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க துணுக்காய் கிளை உதவி முகாமையாளர் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். அவரது தாய் தனது மகனின் புகைப்படத்துடன் தான் ஏறாத இடம் இல்லை, தட்டாத கதவில்லை என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

முல்லைத்தீவு செல்வபுரத்தில் இராணுவத்திடம் பதிவு செய்து நீண்டநேரம் தனது குடும்பத்தினருடன் உரையாடிக்கொண்டிருந்த சிவராசா பகீதரனை அழைத்து இராணுவத்தினர் பேருந்தில் ஏற்றியதைப் பார்த்த அவரது துணைவியார் கண்ணீர்மல்க தனது கணவரை மீட்டுத்தருமாறு உருக்கமுடன் கண்ணீர்விட்டழுத காட்சி கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

Related Posts