பொதுவாக பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகும். அந்தந்த சூழலுக்கு ஏற்றவகையிலேயே நாங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும்.சில சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகளின் உசுப்பேத்தலுக்கு மக்கள் எடுபட்டு சாதகமாக வாக்களிப்பதுண்டு. சில சந்தர்ப்பங்களில் மக்கள் அதைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வோடு உணர்ச்சிக் கோசங்களுக்கு எடுபடாமல் எதிர்த்து வாக்களிப்பதுண்டு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ராஜ்ஜித்திலிருந்து பிரிந்து செல்வது தொடர்பாக மக்கள் கருத்தறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர். இதே போல் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் எவ்வாறான வெளிப்பாடு கிடைக்கும் என்று பிபிசி கேட்டபோது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
ஸ்கொட்லாந்தில் பெரும்பான்மையான மக்கள் அங்கிருக்கக்கூடிய அரசியல்வாதிகளின் கருத்துக்கு எடுபட்டு வாக்களிக்கவில்லை. ஆனால் இலங்கையில் எங்களது போராட்டத்தில் உண்மைத் தன்மை இருந்தபடியால் எங்களுக்கு போராட்டத்தின் பலனாக இலங்கை இந்திய ஒப்பந்தம் எனும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
அதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கடந்த காலத்தில் எமக்கு கிடைத்த அதிகாரத்தைக் கூட எமது தமிழ்த் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முன்னர் எங்களுடைய ஆயுதப்போராட்டத்தை கையாண்ட விதத்தில் சரி, பிழைகள் இருக்கலாம். அதைப்பற்றி இப்போது விமர்சிக்க நான் விரும்பவில்லை.
ஆனால் எங்களுடைய காலகட்டத்தில் எமக்கு பல அனுபவங்கள் கிடைத்துள்ளன. அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டுதான் இவற்றைக் கூறுகின்றேன். பிரச்சினைகளையும் அவ்வாறே அணுக முற்படுகின்றேன். பிரச்சினைகளும் சூழலும் வேறுபட்டவை என்றவகையில் இங்கு தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தைப்போல் இங்கு கூட அப்படியான ஒரு கோசத்தை முன்வைத்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. கடந்த காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்த விடயத்தில் எமது தலைவர்கள் விட்ட தவறினால் எமது மக்கள் பல இழப்புக்களையும் துயரங்களையும் இடப்பெயர்வுகளையும் சந்திக்கவேண்டி வந்தது.
இன்று அவற்றிலிருந்து மக்கள் விடுபட்டுள்ள நிலையில் மீண்டும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கே திரும்பியுள்ளோம். கடந்த காலத்தைப்போல் இதையும் தவறவிடாமல் 13ஆவது திருத்தச் சட்டத்தை சரியாக அணுகுவோமாக இருந்தால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்று நீண்டகாலமாக கூறிவருகின்றேன்.
முதலில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் சமகாலத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும் கூட்டுக்கட்சிகளின் அரசாகவே இருக்கின்றது. இருந்தாலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் எமது பிரச்சினைகளை விவாதிக்கக்கூடிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தளம் எதுவாக இருந்தாலும் எமது அணுகுமுறைகளும் முக்கியமாகும். நாங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், தீராப்பிரச்சனையாக இருக்கவேண்டுமென்பதற்காக அணுகுவதற்கும் வேறுபாடுகள் உண்டு.
அன்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், தீர்வுகள் காணப்படுவதற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று காரணங்களை கூறியிருந்தார். ஒன்று, கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டோம். இரண்டு, மக்களை உணர்ச்சிவசப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது. மூன்று, நடைமுறைச் சாத்தியமாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை எமது அனுபவங்களிலிருந்து ஆரம்பம் முதல் நாங்கள் கூறிவருகின்றோம். நாங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான வேண்டும் என்று அணுகினால் தீர்வொன்றைக் காணமுடியும் என்பதே எமது அணுபவங்களுக்கூடாக கூறக்கூடிய நம்பிக்கையாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.