Ad Widget

தமிழ்க் கைதிகளை விடுதலை செய்ய புதிய அரசாங்கமும் தயங்குகிறதா?

இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் புதிய அரசாங்கமும் தயக்கம் காட்டி வருவதாக தமிழ்த் தலைவர்களை மேற்கோள்காட்டி விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

prot

ஆனால், தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் வரும் மார்ச் மாதமளவில் இறுதிப் பெயர்ப் பட்டியல் தயாராகிவிடும் என்றும் நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

‘…நாட்டில் ரகசிய முகாம்கள் ஏதும் இருந்தால் அவற்றை மூடிவிட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்கமுடியும்’ என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியதாகவும் நியுயோர்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருப்பதால் பெரும்பான்மை சிங்கள மக்களை அதிருப்திக்கு உள்ளாக்க விரும்பாததாலேயே அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் மறுத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது.

‘தேர்தல் நெருங்குவதால் காலத்துக்கு ஏற்ப பிரதமர் நடந்துகொள்ளப் பார்க்கிறார்’ என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய நீதியமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவொன்று அரசியல்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

‘மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் கிடைக்கும்’ என்று கூறிய சுவாமிநாதன், இந்தக் குழுவின் அறிக்கையைக் கொண்டே, அரசியல்கைதிகள் மற்றும் ரகசிய முகாம்கள் தொடர்பில் அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் கூறினார் அமைச்சர் சுவாமிநாதன்.

Related Posts