Ad Widget

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை ஆராய்வு!

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தால் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றையதினமே, தீர்மானிக்கப்படும் என்று, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மகேஷ் வீரமன், நேற்று (14) கட்டளையிட்டார்.

கஜபா படையணியின் முன்னாள் க​மாண்டர் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட எட்டு பேர் கெப்ரக வாகனமொன்றில், வில்பத்து சரணாலயத்தில் பயணித்துகொண்டிருந்த வேளையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகுற்றச்சாட்டு பத்திரத்தை தளர்த்தினால், குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரென, பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையி​லேயே, அவ்விருவரின் விளக்கமறியலையும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வரையிலும் நீடித்த நீதிபதி, அவ்விருவரின் கோரிக்கையும் அன்றையதினமே ஆராயப்படும் என்றும் மன்றுக்கு அறிவித்தார்.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில், கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான சூரியகாந்தன் ஜெயசந்திரன் மற்றும் சிவபிரகாசன் ஷிவசீலன் ஆகிய இருவமே, கடந்த ஆறுவருடங்களாக சிறையில் இருக்கின்றனர் என்று அவ்விருவர் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

Related Posts