Ad Widget

‘தமிழீழ எல்லாளன் படை’ எனும் தலைப்பில் வடமராட்சியில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் நெல்லியடி நகரப் பகுதியில் “தமிழீழ எல்லாளன் படை” தமிழீழம் என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

அன்பார்ந்த தமிழீழ மக்களே என விளித்து,

‘நடந்து முடிந்த வன்னி யுத்த அவலத்தின் பின் சிங்கள பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் எம்மினத்தின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

எம் இனத்தின் விடுதலை உணர்வை சிதறடிக்க எதிரியானவன் கலாச்சார சீர்கேடு எனும் ஆயுதத்தை பிரயோகிக்கின்றான்.

இதற்கு உறுதுணையாக பல இளைஞர் யுவதிகளும் செயற்படுகின்றார்கள். இதற்கு எம்மவர்கள் துணை போவதே வேதனையாக உள்ளது.

இனிமேலும் எதிர்வரும் காலத்தில் இப்படியான கலாசார சீர்கேடுகள், ஆட்கடத்தல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், குழு மோதல்கள், பகிடிவதைகள் போன்றன இடம்பெறுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.

அத்துடன் அரச இராணுவ இயந்திரத்துடனும் ஒட்டுக்குழுக்களான துரோகக் கும்பலுடனும் நட்பை வளர்த்துக்கொண்டு உளவு சொல்பவர்களும் சமூக விரோதிகளும் அவர்களுக்கு துணை நிற்பவர்களும் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்’ என்று அந்த துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Related Posts