Ad Widget

தமிழினி அடுத்த மாதம் விடுதலை, வடமாகாண தேர்தலிலும் போட்டி?

Tamiliniதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார்.

இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் தமிழினி, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விடுதலையாகவுள்ளார் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை அரசியல் முக்கியஸ்தர்கள் வழங்க முன்வரலாம்.

ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts