Ad Widget

தமிழர் விடயத்தில் பாரபட்சமாக நடக்கும் தொல்லியல் திணைக்களம் – சத்தியலிங்கம்

யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும், தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“கடந்த அரசாங்கம் வவுனியாவின் வடக்கு பகுதியில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையினக் குடியேற்றங்களை செய்துள்ளது.

எங்கள் மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத பிறமாட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் இந்தப்பிரதேசங்களில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறான குடியேற்றங்கள் செய்யப்பட்டபோது பின்பற்றப்படாத வனவளச்சட்டங்கள் தற்போது தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறும்போது அவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து மீளத்திரும்பிய 35 குடும்பங்கள் மருதோடையில் மீளக்குடியேற விருப்பம் தெரிவித்தனர். அவர்களை மீளக்குடியேற்ற மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொடுத்திருந்தேன்.

அத்துடன் மேலும் குடியேற பல குடும்பங்கள் விரும்புகின்றன. அவர்களையும் மீளக்குடியேற்றுவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மத்திய மீள்குடியேற்ற அமைச்சினூடாக செய்யப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், வன வளத்திணைக்களம் மீள்குடியேற்ற அபிவிருத்தி வேலைகளை தடுத்துள்ளது.

இதேபோன்றே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளை தொல்லியல் திணைக்களம் தடுத்துள்ளது.

தாங்கள் விரும்பும் இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் அமைக்க அனுமதி கொடுக்கும் தொல்லியல் திணைக்களம் இந்துக்களின் புராதன ஆலயமான வெடுக்குநாறி மலைக்கு தடை விதித்துள்ளமையானது, இந்த இரண்டு திணைக்களங்களும் தமிழ் மக்களின் விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதை உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிக்க செய்யுமே தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts