Ad Widget

தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு சீனாவிடம் உதவி கேட்கிறார் சம்பந்தன்!

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

sampanthan

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து இலங்கையின் அரசியல் களநிலைவரத்தில் ஏற்பட்டுவரும் பெரும்மாற்றங்கள் தொடர்பாக நேரில் கண்டறிந்துகொள்வதற்காக இலங்கைக்கு ஒருவார கால பயணத்தை மேற்கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தைச் சேர்ந்த மூவரடங்கிய தூதுக்குழுவினர் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்தபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அணுகுமுறையிலும் பார்க்க தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணுகுமுறை எத்தகைய ரீதியில் மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது என வினவியதற்குப் பதலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “உலகிற்கு ஒரே நாடு ஒரே மக்கள் என உதட்டளவில் கூறிக்கொண்டபோதிலும் மஹிந்த ராஜபக்‌ஷ சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக மட்டுமே நடந்துகொண்டார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அனைவரையும் உள்ளடக்கியதான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றார். அனைத்து மக்களின் பிரதிநிதியாக இருக்க விரும்புகின்றார். அனைவரது கருத்துகளையும் செவிமடுத்து முன்செல்ல விரும்புகின்றார். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் நியாயமான ரீதியில் நடந்துகொள்ள விரும்புபவர்கள். ஆனால், அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக மஹிந்த அதைச் செய்திருக்கவில்லை. தாம் ஜனாதிபதியாக இருந்தபோது விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமையால் சிங்கள மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமக்கே வாக்களிப்பார்கள் என மஹிந்த எண்ணியிருந்தார்.ஆனால், சிங்கள மக்கள் அந்த எண்ணத்தைப் பொய்ப்பித்துவிட்டார்கள்” – என்று விளக்கினார். மைத்திரிபால சிறிசேனவுக்குத் தேர்தலில் ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தேசிய அரசில்

அமைச்சுப் பதவிகளை ஏற்று அங்கம் வகிக்கவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சம்பந்தன், “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய அரசு குறுகிய காலத்திற்கே இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெறுவது தீர்வாக அமைந்துவிடாது. மாறாக, காத்திரமான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதான தீர்வையே தமிழர் தரப்பு எதிர்பார்த்து நிற்கின்றது” என்று குறிப்பிட்டார்.

தமிழர்கள் தம்முடைய பிராந்தியத்தில் தமது அலுவல்களை முன்னெடுப்பதற்கான தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புவதாகக் குறிப்பிட்ட சம்பந்தன், இப்படியான ஏற்பாடுகள் உலகின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

எதைச் செய்தாலும் சீனா தம்மைப் பிணையெடுக்கும் என்ற எண்ணம் இலங்கை ஆட்சியாளர்கள் மத்தியில் நிலவுவதாக இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அத்தகைய எண்ணம் நல்லதல்ல என்று தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ராவோ ஹூ ஹூவா, அதன் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாங் ஜியுகுயிங் மற்றும் டேன் வேய் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

சீனக் கம்யூனிஸக் கட்சி உலகளவில் 180 நாடுகளில் 600 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிவருவதாக ராவோ ஹூஐஹூவா இதன்போது சுட்டிக்காட்டினார். 2012ஆம் ஆண்டில் பீஜிங்கில் இடம்பெற்ற கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் பங்கேற்றிருந்தபோதிலும் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கும் கம்யூனிஸக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது நேரடிச் சந்திப்பாக நேற்றைய சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts