Ad Widget

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி: அசோக் கே. காந்தா

India_-ashok_kanthaஇலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய சமத்துவமிக்க தீர்வொன்றினைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்தும் தனது முயற்சிகளை எடுக்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்ததாக த.தே.கூ.பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மிக விரைவில் இலங்கையை விட்டுச் செல்லவுள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் நேற்று திங்கட்கிழமை அசோக் கே. காந்தாவுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கினர். அத்துடன், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் த.தே.கூ.பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய த.தே.கூ.பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், ‘இலங்கையின் பழங்குடிகளான தமிழ் மக்களுக்கும் சுய உரிமைகள் உண்டு. அதனால், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகள் என்ற அடிப்படையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று அசோக் கே. காந்தாவிடம் கேட்டுக்கொண்டார் என்று மாவை எம்.பி கூறினார்.

அத்துடன், ‘இலங்கையின் உயர்ஸ்தானிகராக அசோக் கே. காந்தா செயற்பட்ட காலத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவினால் முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனிவரும் காலத்திலேனும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா முழுமூச்சாக செயற்பட வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, ‘இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் அசோக் கே. காந்தா உறுதியளித்ததாக மாவை எம்.பி மேலும் கூறினார்.

Related Posts