Ad Widget

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடாது – ஆனந்தசங்கரி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரிக்கக்கூடாது எனவும், அவ்வாறு பகிஸ்தரித்தால் 2004ஆம் ஆண்டு நடந்தவையே மீண்டும் நடைபெற வைப்பதாக அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

anantha-sankaree

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (29) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்களாகிவிட்டன. இன்னும் பிரச்சாரத்துக்கு ஒரு வாரம் கூட இல்லை. இந்த தேர்தல் வழக்கம் போல தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் ஓர் முக்கிய தேர்தலாகும்.

இந்த தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவையே தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அவரையே ஆதரிக்க வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளது. பலம் பொருந்திய ஓர் அணி நம்பக்கூடிய சில பிரமுகர்களின் உத்தரவாதத்துடன் போட்டியிடுவதானது நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.

இந்த வேளையில் பகிஸ்கரிப்பு, நடுநிலைமை போன்ற எதற்கும் மக்கள் செவிசாய்க்காது செயற்படுவதே சிறந்ததாகும். இனப்பிரச்சனை தீர்வுக்கு நல்லதோர் முதற்படி என்பதை நாம் உணர வேண்டும். இனப்பிரச்சனை தீர்வுக்கு உத்தரவாதம் அளிப்பவர்களை நான் நன்கறிவேன்.

எனது அரசியல் அனுபவத்தில் சரித்திரத்தில் முதற் தடவையாக கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு. இந்த நோக்கம் எதுவாக இருந்தாலும் எமக்கு சாதகமாக அமைந்துள்ளமையால் தமிழ்மக்கள் தமது தெரிவில் மிகக்கவனத்துடன் செயற்பட வேண்டும்.

கடந்த தேர்தல்களில், குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் தலையிடாது ஒதுங்கியிருந்து கொண்டு தமிழ் மக்களை அவர்களின் விருப்பப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகின்றது.

கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர்.

இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் தற்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரண்டொரு நபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும், ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர்.

தமிழ் மக்களின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்திருந்தும் மூன்று வாரங்களாகியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவெடுக்கவில்லை. மக்கள் மத்தியில் பலவிதமான பிரச்சாரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

எது எப்படியிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் மக்களுக்கு ஆலோசனை கொடுப்பதை தவிர்த்து தமிழ் மக்களை அவர்கள் விருப்பப்படி வாக்களிக்க வேண்டுமேன வேண்டுகோள் விடுக்குமானால், கடந்த இரு தடவைகள் நடந்த அசம்பாவிதம் மீள இடம்பெறாமல் இருப்பதை தடுக்கலாம்.

மக்கள் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனாவுக்கே வாக்களிக்க தீர்மானித்துவிட்டார்கள். ஏற்கனவே தபால்மூல வாக்குகள் 5 இலட்சத்துக்கு மேல் அளிக்கப்பட்டுள்ளன. இனியேனும் அவர்களை குழப்பாமல் இருப்பதே சிறந்ததாகும்.

பொறுப்புள்ள ஒரு மதத்தலைவரின் அனுசரணையுடன் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பது, தமிழ் மக்கள் செய்த துரதிஸ்டமே. இதில் அங்கத்துவம் வகிக்கும் 76 பேரில் பெரும்பகுதியினர் ஏறக்குறைய அரைவாசிக்கு மேற்பட்டோர் பல்கலைகழகத்தோடு தொடர்புடைய மாணவ தலைவர்கள், பேராசிரியர்கள், வைத்திய கலாநிதிகள் ஆவார்கள்.

அதிலும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். தமிழ் சிவில் சமூகத்தை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக கருத முடியாது. அவர்கள் கேட்பது போல் தேர்தல் பகிஸ்கரிக்கப்பட்டால் 2004ஆம் ஆண்டு நடந்தவையே மீண்டும் நடைபெற வைப்பதாகவே அமையும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts