Ad Widget

தமிழர்கள் தூங்கக்கூடாது: மாவை

தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும். நாங்கள் பாண்டவர்களைப் போன்றவர்கள்.
எங்களால் வெற்றி பெற முடியும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

mavai-function-2

தமிழீழ விடுதலைப் புலகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எமது பிரதேசங்களில் எந்தவொரு வெற்றியையும் பெற முடியாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி, காங்கேசன்துறை தமிழரசு கட்சி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வரவேற்பு கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாங்கள் பாண்டவர்களைப் போன்றவர்கள். எங்களால் வெற்றி பெற முடியும். அறம் பிழைப்போரே கஸ்டங்களை அனுபவிப்பார்கள். தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் தூங்கிவிடக் கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாட்டின் தூதுவர் என்னுடன் தனியாக பேசினார். உள்நாட்டு பிரச்சினைகளில் உங்கள் தலையீடுகள் இருப்பதை இலங்கை அரசு விரும்பவில்லை என எனக்கு அவர் குறிப்பிட்டார்.

இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன. போராடுவதற்கான ஒரு தூண்டுதலாகவே அவை அமைக்கின்றன.

எமது சிறு பிள்ளைகள் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கு செல்லும் நிலைமைக்கு செல்லவிடாது நாம் இந்த போராட்டத்தை நடத்தி அவர்களை நல்ல முறையில் வாழ வழி செய்ய வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

‘எமக்கு கிடைக்கப்போகும் தமிழீழம் எமது மண்ணில் தான் கிடைக்க வேண்டும். இதனை விடுத்து எங்கள் மொழியை இழந்து மண்ணை இழந்து வேறு எங்கும் செல்ல முடியாது.

எமது மண்ணை இராணுவம் ஆளுகின்றது. இராணுவத்தினரின் உல்லாச வாழ்க்கைக்காக இதனை நாம் அங்கீகரிக்க முடியாது. இதனை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

நாங்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல. இன்று நாங்கள் அஹிம்சை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அஹிம்சை போராட்டம் எப்போதும் தோற்றுப்போனதில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts