Ad Widget

தமிழர்கள் தங்களைத் தாங்களே பராமரிக்க வேண்டியிருக்கும்! – முதலமைச்சர் சி.வி

நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதே தனது கணிப்பு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

wigneswaran__vick

அனலைதீவு பிரேதச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை நேற்று வியாழக்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

வடக்கு, கிழக்கு இலங்கையானது ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. எமது வோட்டினால் இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த நாங்கள் தற்பொழுது எமது வோட்டினால் அதைச் சாதித்திருக்கின்றோம் எனப்படுகின்றது.

எமது வாழ்க்கை முறையில் இனி மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துப் பராமரிக்கப் போகும் ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வர வேண்டியிருக்கும் என்பது எனது கணிப்பு.

நெருக்குதல்கள், தேவைகள் இருந்தால்த்தான் எம்மை நாடித் தேடி நலங்கள் பல கொழும்பில் இருந்து வரக் கூடும் என்பதும் அவை அற்ற நிலையில் “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்குத் தள்ளப் படக் கூடும் என்ற ஒரு எண்ணமும் எழாமல் இல்லை.

அதனால் எமது புலம் பெயர்ந்த இரத்த உறவுகள் எமக்கு உறுதுணையாக இருந்து எம்மை கையேற்றி விட முன்வர வேண்டும்

உதவிப் பணிகள் நடைபெறும் போது அவை தான்தோன்றித் தனமாகவும் நடைபெறலாம் நாம் தோன்றித்தனமாகவும் நடைபெறலாம்.

அதாவது எமது வடமாகாணத்திற்கு எவையெவை தேவை, என்னென்ன விதத்தில் அத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், எந்த அளவுக்குப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விடயங்களை நாம் யாவரும் சேர்ந்து கணித்து நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள முற்படுவது நாம்தோன்றித்தனம்.

தனியொருவர் தனக்கு வேண்டியதைத் தனித்துவமாகக் கலந்துரையாடல் அற்று செய்து கொடுப்பது தான்தோன்றித்தனம்.

இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பல நாட்களாக நாங்கள் யாவரும் வேண்டி நின்ற ஒரு தேவை.

எமது வைத்தியத் துறை அமைச்சருடன் கலந்துறையாடியே இக் கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நாம் எமது வடமாகாணத்தை திட்டமிட்டே முன்னேற்ற வேண்டும். என்று அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்

Related Posts