Ad Widget

தமிழர்கள் அனைவரும் திரண்டு வாக்களித்தாலே வெற்றி நிச்சயம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தாலே போதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விடும்.

அதன் மூலம் நம்மைக் காட்டிக் கொடுத்து சுகம் கண்ட எட்டப்பர் கூட்டத்தை யாழ்.மண்ணிலிருந்தே விரட்டியடிக்க முடியும் என்று யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தொல்புரம் மேற்கு,துணைவி,சுழிபுரம்,பொன்னாலை ஆகிய பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தார்.

அங்கு கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் கடந்த பொதுத் தேர்தலில் 38 சதவீதமே வாக்களித்தோம்.அதனால் சிங்களக் கட்சிகளிடம் நம்மை அடகுவைத்து வாழ்ந்த மூவர் நாடாளுமன்றம் செல்ல நேரிட்டது.

அன்று இருந்த இராணுவ அடக்கு முறைகளும் ஈ.பி.டி.பியினரின் கொலை மிரட்டல்களும்,அடாவடித்தனங்களும் இப்போது இல்லை.இந்த அமைதிச் சூழலை ஏற்படுத்தியதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தான் என்னை தோற்கடித்து விட்டனர் என்று மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

தமிழர்களை வாக்களிக்க விடாது தடுத்திருந்தால் மகிந்த ராஜபக்சவே இப்போதும் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று அவரது தம்பி கோத்தபாய கூறுகின்றார். ஆக தமிழர்கள் ஒருபோதும் தம்மோடு சேரமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்.எனவே தான் எந்த அரசாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றன.

எனவே நமது பேரம் பேசும் சக்தியையும் , பெரும்பான்மையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் .நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டும்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடக் கூடாது பெரியவர்களும், தாய்மார்களும், இளைஞர், யுவதிகளும் தவறாமல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு வாக்களித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts