Ad Widget

தமிழர்களின் உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது: சம்பந்தன்

தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை எவராலும் புதைத்துவிட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “குறுகில அரசியல் நோக்கத்துக்கா , அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் வடக்கு, கிழக்குப் பிரச்சினை தொடரவேண்டும் என்பதே சிலரின் விரும்பமாகஇருக்கின்றது.

பிரிக்கபடாத நாட்டுக்குள், சகல பிரஜைகளும் சமவுரிமையுடன் வாழும் வகையில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அரசியலமைப்பின் ஊடாக உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் கடந்த சில நாட்களாக இடம்பெறவில்லை. தேர்தல், கட்சிமாற்றம் உள்ளிட்ட காரணிகளால் இவை நடக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய அதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும என்பதே அவருடைய நிலைப்பாடாக உள்ளது.

இதனால்தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை எதிர்க்கமுடியாதுள்ளது. இந்த நிலைப்பாட்டிலேயே நாங்களும் இருக்கின்றோம்.

கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் தொடர்ந்தும் வருகிறது.

பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டுக்கள் தமிழ் மக்களும் சமமான பிரஜைகளாக வாழக்கூடிய வகையிலான தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம். இது புதிய அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட வேண்டும்.

இதனை எவரும் மறுக்க முடியாது. ஏனைய நாடுகள் முன்னேறிச் செல்வதற்கு அரசியலமைப்புக்கள் உதவியதைப் போன்று எமது நாட்டுக்கும் புதிதான அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்”என்றார்.

Related Posts