Ad Widget

தமிழருக்கு நேற்று சந்தோசமான நாள் – வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் நாம் பலவிதங்களிலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் யோசித்து என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வந்தோமோ அதற்கு ஒரு பதில் கிடைப்பது போன்று சில நடவடிக்கைகள் நடந்துள்ளன.

முதலில் நாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க வேண்டும். எங்களுடைய பிரேரணையை மனதில் எடுத்து அதில் உள்ள உள்ளடக்கங்களை முன்னிறுத்தி அவற்றின் அடிப்படையில் எங்களுக்கு சாதகமான பிரேரணையை கொண்டு வந்து எல்லோருடைய ஏகோபித்த விருப்புடன் நிறைவேற்றியுள்ளார்.

இதில் இருந்து எங்களுடைய மக்களும் தமிழகத்தின் மக்களும் ஒருமித்த குரலுடன் சர்வதேச விசாரணையொன்று இருந்தால் தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.

இது சம்பந்தமாக ஐ. நா. மனிதஉரிமை ஆணையகம் தமிழ் மக்களுக்கு சார்பான விதத்தில் இவ்வாறு செய்யவேண்டும் என அறிக்கையில் ஆணித்தரமாக தெரிவித்திருப்பதை வைத்து நாம் ஒரு பிரேரணையை நாங்கள் நல்ல விதத்திலே தயாரிக்கவேண்டும். அதன் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts