Ad Widget

தமிழருக்கு இன்று தேசிய துக்க நாள்! சுடர் ஏற்றி எமது உறவுகளை அஞ்சலிப்போம்!!

“இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாளாகும் – போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும் – இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும். எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக.” – இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

இந்நிலையிலேயே, சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இலங்கையின் சரித்திரத்தில் போர் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்படவேண்டும். இந்தப் போர் காரணமாக எல்லா இனத்தவர்களும் உயிரிழப்புகளை – துன்ப, துயரங்களை எதிர்நோக்கினர். இது எல்லோருக்கும் படிப்பினையாகும். எனினும், இந்தப் போர் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குப் பாரிய இழப்புகளைக் கொடுத்துள்ளது.

இதனால் எமது தமிழ் மக்கள் உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர். அவர்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிந்தன. இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் அரசியல் தீர்வு கண்டிருந்தால் இந்தப் போர் இடம்பெற்றிருக்கமாட்டாது.இந்நாட்டில் மீண்டும் போர் இடம்பெறக்கூடாது என்பதே எமது விருப்பமாகும்.

எனவே, தற்போது ஆட்சியிலுள்ள அரசு தேசிய இனப்பிரச்சினைக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை உடன் காணவேண்டும். இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழருக்கு தேசிய துக்க நாளாகும் போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும் இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி – அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும்.

எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக. உயிரிழந்த உறவுகளுக்கு நாம் இவ்வாறு செய்வதன் ஊடாக எமது மனவேதனைகளை ஓரளவு தேற்றிக்கொள்ளலாம். அதேவேளை, இன்றைய நாளை தேசிய துக்க நாளாக நாம் அனுஷ்டிப்பதன் மூலம் போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும். எனவே, தமிழினத்தின் இன்றைய தேசிய துக்க நாள் நிகழ்வுகள் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்” – என்றார்.

Related Posts