Ad Widget

தமிழரசுக் கட்சியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களும் உள்ளனர்! – சி.வி.கே.சிவஞானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு நாளும் இருக்கவில்லை. 30 வருடகால வரலாறு உள்ளது. அது சிலருக்குத் தெரியாது இருக்கலாம். தமிழரசுக் கட்சியில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. எதிரானவர்களும் உள்ளனர்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் துணை பொதுச் செயலரும் வடக்கு மாகான அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கடந்த 91 ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றம் ஊடக ஜனநாயாக பாதையிலும் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது என கூறியவர்.

பிரபாகரன் என்னுடன் நேரடியாகச் சந்தித்து, அப்போதைய அரச தலைவர் பிரேமதாசவை சந்திக்க அனுப்பி வைத்தார். அப்போது என்னிடம் அவர் சில விடயங்களை கூறியிருந்தார்.அதில் நாம் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டு இருக்க முடியாது. நாடாளுமன்ற அரசியலிலும் நாம் ஈடுபட வேண்டும். அதற்கான தேவை உள்ளது என்று கூறியிருந்தார்.

புலிகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படவில்லை.ஆனாலும் ஒரு சில தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வாறு அவர்கள் ஏன் படுகொலை செய்யப்பட்டனர் என விடுதலைப்புலிகள் தான் கூற வேண்டும். அவர்கள் காரணமின்றி அவர்களை கொலை செய்திருக்க மாட்டார்கள். அதற்காக அவர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தவில்லை. அமிர்தலிங்கம்,ராஜீவ்காந்தி போன்றவர்களை கொலை செய்தது நாம் செய்த தவறு என பிரபாகரன் 2002 ஆம் ஆண்டுகளிலேயே கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல. அவர்களுக்கு எதிரானவர்களும் உள்ளனர்.அ வர்களை மக்கள் தான் இனம் காண வேண்டும்.அவர்கள் இப்போது அரசியலுக்கு வந்தவர்கள். எனவே அன்னப்பறவை பாலையும் நீரையும் பிரிப்பது போல மக்களே அனைத்தையும் அறிந்து கொள்வார்கள்.

அரசமைப்புத் தொடர்பாக பல்வேறு கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.ஆனால் தற்போதைய அரசமைப்பிர் பல பிழைகள் உள்ளன.உதாரணமாக அரச தலைவர் இறந்தால் யார் அடுத்த அரச தலைவர் என்பது தொடர்பாக அரசமைப்பின் சிங்கள மொழியாக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

எனவே புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வினைத் தனது காலத்திலேயே பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போராடி வருகின்றார்.என்றார்.

Related Posts