தமிழரசுக் கட்சியில் இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு! பலத்த பாதுகாப்புடன் சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், கட்சியின் உறுப்பினர்களாக ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியில் புதிதாக இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பருத்துறை அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

இதன்போது, கட்சியில் புதிதாக இணைந்து கொள்பவர்கள் அங்கத்துவப் படிவங்களை நிரப்பி கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்து அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர்.

இந் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட பிரதேச கிளை அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பல தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் பலத்த பாதுகாப்புடன் கலந்து கொண்டிருந்தார்.

எனினும், சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருக்கின்ற அதிரடிப்படையினர், வாகமொன்றில் அங்கு வந்த போதும், நிகழ்வு நடைபெறும் பகுதியில் நிற்கவில்லை. அவர்கள் வேறு இடத்திற்கு அனுப்பட்ட நிலையிலேயே நிகழ்வு நடைபெற்றது.

Related Posts