தமிழக மீனவர்கள் வடபகுதி கடலில் மீன்பிடிப்பதினால் வடபுல மீனவர்கள் பாதிப்பு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அரசாங்கத்துடனும், அந்நாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளுடனும் எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்காக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குழுவினர் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.

நேற்று பிற்பகல் மீன்பிடி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் நாட்டின் வடபகுதி கடலில் கூடுதலாக மீன்பிடியில் ஈடுபடுவதால் வடபுல மீனவர்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்ட முடியாதிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும், இந்திய மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (2) பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவுக்குச் சென்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பாதகம் ஏற்படாத வகையில் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அரசாங்கத்தின் நோக்கமாகுமென என்று தெரிவித்தார்.

நாட்டின் மீன் சந்தையில் தற்போது மிகவும் குறைந்த நிலையில் மீன் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதனால் மக்களுக்கு குறைந்த விலையில் மீனைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் தற்போது கிட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts