Ad Widget

தமிழகத்தை நேற்றும் சென்றடைந்த நான்கு ஈழ அகதிகள்

இலங்கையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு படகு மூலம் சென்ற நான்கு அகதிகளிடம் தனுஸ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RMM-Photo-2

இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு இலங்கை அகதிகள் படகில் வந்து கொண்டிருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற தனுஸ்கோடி காவல்துறையினர் நான்கு பேரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டுசென்றனர். இந்த நிலையில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.

RMM-Photo-3

இதன்போது மன்னார் மற்றும் வவுனியா பகுதியைச் சேர்ந்த ரவிந்திரன், மலர், சதீஸ், சாந்தி, ஆகிய இவர்கள் தங்களது உறவினர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி அகதிகள் முகாமில் இருப்பதாகவும் விமானம் மூலம் வந்ததால் அதிகளவில் பணம் செலவாகும் என்பதால் மன்னாரில் இருந்து ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து தனுஸ்கோடிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து சர்வ சாதரணமாக அகதிகளை படகுகளில் ஏற்றி வந்து இறக்கி விட்டு செல்வதை இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கை வழியாக தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இருந்து படகுகள் வந்து செல்வதை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அகதியாக சென்ற சாந்தி கருத்து தெரிவிக்கையில்…

வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் எனக்கு 5 குழந்தைகள். என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் என் அம்மாவோடதான் இருக்கிறேன். அதனால், அரசாங்க சலுகை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. கூலி வேலை பார்த்து கிடைக்கும் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை.

இலங்கையில் விலைவாசி அந்தளவுக்கு உயர்ந்து இருக்கிறது. ஒரு கிலோ அரிசி 90 ரூபாய், சீனி 110 ரூபாய், சின்ன தேங்காய் 50 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் எங்க சொந்தகாரர்களுடன் தங்கிடலாம் என்று அம்மா, குழந்தைகள் எல்லாரும் கிளம்பினோம். படகு சின்னதாக இருந்ததால அவர்களை அழைத்து கொண்டு வர முடியவில்லை. அதனால் நான் மட்டும் இங்கே வந்துள்ளேன்” என்றார்.

மற்றொரு அகதியான சதீஷ்,

பாண்டிச்சேரியில் உள்ள எங்க உறவினர் வீட்டில் என் மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே பாஸ்போர்ட் எடுத்து இந்தியாவுக்கு வந்தேன். விசா முடிந்து போனதாலும், இலங்கையில இருக்கும் காணியை (நிலம்) விற்பதற்காகவும் இலங்கைக்கு திரும்ப போனேன். ஆனால் என் காணியை விற்க முடியவில்லை.

வேலையும் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனால், என் பொண்டாட்டி புள்ளைங்களோட சேர்ந்து வாழ அகதியாக வந்துள்ளேன். மறுபடி இந்தியா செல்ல விசா கொடுக்க மாட்டாங்க என்பதால் படகில் ஏறி தப்பி வந்தேன்” என்றார்.

இலங்கையில் தமிழர்கள் சந்தோஷமாக வாழ எல்லா முயற்சியும் எடுப்பதாக ஐ.நா.வும், இந்திய அரசும் சொல்லி கொண்டிருந்தாலும் தமிழர்கள் இலங்கையைவிட்டு அகதிகளாக வெளியேறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Related Posts