Ad Widget

தமது விவசாய காணிகளில் சிங்களவர்கள் அத்துமீறுவதாக திருமலை தமிழர்கள் போராட்டம்!

திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

muthur_protest

மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள் வேளாண்மை செய்யக் கூடியச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

மூதுர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லையிலுள்ள கங்குவேலி படுகாடு பகுதியுிலுள்ள தமிழர்களுக் சொந்தமான வயல் நிலங்களுக்கு போர் காலத்தில் தமிழ் விவசாயிகளினால் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

போர் முடிவடைந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆனாலும், காணி உரிமைகள் தொடர்பில் தாங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக தமிழ் விவசாயிகள் கூறுகின்றனர்.

காணி உரிமை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் நடைபெற்றுள்ள போதிலும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே அந்தப் பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர்களே தமது காணிகளில் அத்துமீறிய நெல் வேளாண்மை செய்வதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழ் விவசாயிகளினால் முன் வைக்கப்ட்டுள்ள இந்த கோரிக்கை தொடர்பாக பிரதேச செயலாளர்க்கும் விவசாயிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றில் ஒரு வார தாலத்திற்குள் இது தொடர்பாக ஆராய்யப்பட்டு தீர்வொன்று காண்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என அரச தரப்பு கூறியுள்ளது.

Related Posts