Ad Widget

தமக்கெதிரான உதயன் பத்திரிகையின் அவதூறு வழக்கில் சாட்சியமளித்தார் டக்ளஸ்

தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலும் அவதூறுக்கு உள்ளாக்கும் வகையிலும் நியூ உதயன் பப்ளிகேசன் (பிறைவேட்) லிமிட்டட் கம்பனியால் 2010.12.18 ம் திகதி வெளியிடப்பட்ட உதயன் பத்திரிகைச் செய்தி தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மானநஷ்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

co1

யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்றய தினம் இடம்பெற்ற வேளையில் அமைச்சர் அவர்கள் தனது சாட்சியத்தை வழங்கினார். இவரது சாட்சியத்தினை அமைச்சரின் சிரேஸ்ட சட்டத்தரணி யு.அப்துல் நஜீம் சட்டத்தரணி தேவராஜன் ரெங்கனின் அறிவுறுத்தலுடன் நெறிப்படுத்தினார்.

இதன்போது தன்னை அவமானப்படுத்தும் வகையிலும் அவதூறுக்கு உள்ளாக்கும் நோக்கிலும் உதயன் பத்திரிகையின் மூலமாக பல தவறான செய்திகளை அப்பத்திரிகை பிரசுரம் செய்துள்ளது என்றும், அத்தகைய செய்திப் பிரசுரங்கள் தொடர்பாக குறித்த பத்திரிகை கம்பனிக்கு எதிராகவே தான் மாவட்ட நீதிமன்றத்தில் இம் மானநஷ்ட வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாகவும், எவ்வாறான வகையில் தனக்கு மானநஷ்டம் ஏற்பட்டுள்ளதென்பதையும் விபரமாக அமைச்சர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மேற்படி கம்பனியால் வெளியிடப்பட்ட செய்தி பிரசுரமானது தனக்கும் தனது கட்சிக்கும் அவதூறையும், அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதன்காரணமாக 1000 கோடி ரூபாவை நஷ்டஈடாக குறித்த பத்திரிகை நிறுவனம் தமக்கு வழங்க வேண்டுமென நீதிமன்றத்திடம் கூறினார்.

எதிர்த்தரப்பில் சட்டத்தரணி சுமந்திரன் அமைச்சரைக் குறுக்கு விசாரணை செய்தார்.

இவ்வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஒத்திவைத்தார்.

Related Posts