Ad Widget

தப்பிச் சென்றிருந்தால் நெஞ்சில் பட்டது எப்படி? இரா. சம்பந்தன்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில், அண்மையில் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக உயிரிழக்க நேர்ந்த சம்பவத்துக்கு, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கடும் கண்டனத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாணவர்கள் இருவரும் உண்மையில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கும் பட்சத்தில், துப்பாக்கி பிரயோகமானது பின்னிருக்கையில் இருந்தவரை தாக்காமல், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரை தாக்கியது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே, இந்த விடயத்தை இரா.சம்பந்தன் முன்வைத்தார்.

“கடந்த 20 ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டி சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழந்திருந்ததுடன், பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர், அதன் பின்னர் ஏற்பட்ட விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த பொலிஸாரின் இந்த அநாவசியமற்றதும் சட்டவிரோதமானதுமான தாக்குதலை, வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற உடனடி விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றும் உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகிறோம். இந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான உண்மையை முழு நாடும் தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்’ என்று, சம்பந்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Posts