Ad Widget

தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல்

பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த படிப்பை எந்த இடத்தில் இருந்து கொண்டும், அந்த பல்கலைக் கழகங்களில் இணைந்து கொண்டு படிக்கும் முறை முன்பு இருந்தது.

ஆனால், தற்போது அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தான் தபால் மூலம் படிக்க முடியும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் இருந்து, தமிழகத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த வகையில் தான் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.

தமிழகத்தில் இருந்து கொழும்பு நகரில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை அலுவலகங்களை அமைத்துள்ளன. இதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், ஹட்டன் ஆகிய இடங்களில் அலுவலகம் அமைத்துள்ளது.

இந்த பல்கலைக்கழக அலுவலகங்களை தொடர்பு கொண்டு தான், அங்குள்ள தமிழர்கள் பட்டப்படிப்பு படித்து வந்தனர். தற்போதைய புதிய உத்தரவால், அவர்களால் மேற்கொண்டு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வரும் 5 ஆயிரம் தமிழர்களுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்கின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், இலங்கை அரசு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கியது. இவர்கள் அனைவரும் பிளஸ்-2 முடித்தவர்கள். ஆனால், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இவர்கள் அனைவரும் தபால் மூலம் பட்டப்படிப்பை முடித்து, அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். ஆனால், இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய முடிவால், தொடர்ந்து இவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தாங்கள் பார்த்து வரும் ஆசிரியர் வேலையையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் முறையை இன்னும் சில ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சார்பில், இந்திய பல்கலைக்கழக மானிய குழுவுக்கும், தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு, யாழ்ப்பாண பகுதி தமிழர்கள் இப்போது தான் சகஜநிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கல்வி மேம்பாட்டுக்கும், பணி உயர்வுக்கும் அவர்கள் தபால் மூலம் கல்வி கற்பதையே நம்பியுள்ளனர்.

எனவே, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன் கருதி தற்காலிகமாக சில காலங்கள் தபால் மூலம் கல்வி கற்பதை தொடர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts