Ad Widget

தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரை மன்னித்த அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜரை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

கராச்சி நகரில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற அதிவேக பந்துவீச்சு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக கடந்த 5ம் திகதி கர்சாஸ் பகுதி வழியாக வசிம் அக்ரம் தனது காரை ஓட்டிச் சென்றார்.

அப்போது, அவரைத் தொடர்ந்துவந்த மற்றொரு கார் வசிமின் கார்மீது பக்கவாட்டில் மோதியது. அதில் இருந்த ஒருவர் வசிமை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சில குண்டுகள் வசிம் அக்ரமின் காரை துளைத்தன. சினிமாவில் வரும் கார் சேசிங் காட்சிபோல் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வசிம் அக்ரம் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதையயடுத்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார், ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அமிர் ரெஹ்மான் என்பவரை கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் வசிம் அக்ரமுக்கு ஓய்வுபெற்ற இராணுவ மேஜரான அமிர் ரெஹ்மான் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

நாட்டின் கௌரவமாக கருதப்படும் உங்களுடன் மோதவோ, உங்கள் மீது தாக்குதல் நடத்தவோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அசம்பாவிதமாக நிகழ்ந்துவிட்ட அந்த துப்பாக்கிச் சூட்டுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடித்ததைப் பார்த்த வசிம் அக்ரம், இரண்டு நிபந்தனைகளின் பேரில் அவரை மன்னிக்க சம்மதம் தெரிவித்தார்.

அமிர் ரெஹ்மானின் துப்பாக்கி உரிமம் இரத்து செய்யப்பட வேண்டும். அவரது ஓட்டுனர் உரிமமும் இரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு அவர் ஒப்புக்கொண்டால் அவரை மன்னித்து, அவர் மீதான பொலிஸ் நடவடிக்கையை கைவிடலாம் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

இதன்பேரில் ஆலோசனை நடத்திய பொலிசார், அவரது துப்பாக்கி உரிமத்தை இரத்து செய்து விட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து, ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அமிர் ரெஹ்மானை மன்னித்து விட்டதாக வசிம் அக்ரம் அறிவித்துள்ளதாக அவரது மேனேஜர் அர்சலான் ஹைடர் கூறியுள்ளார்.

Related Posts