Ad Widget

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி குற்றச்சாட்டு

இந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பு தன்னைப் படுகொலைசெய்வதற்கு சதிசெய்துவருவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா- இலங்கை இராஜதந்திர உறவில் பெரும் விரிசலை தோற்றுவிக்கக்கூடியதாக இந்தக் குற்றச்சாட்டு அமைந்துள்ளது என இந்தியாவின் ஹிந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டபோது தாம் இதனை உறுதிப்படுத்தியபின்னர் தொடர்புகொள்வதாக கூறியபோதும் இந்தத்தகவல் அச்சுக்குப் போகும்வரையில் அவர் மீண்டும் தொடர்புகொள்ளவில்லை என ஹிந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதுடன் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts