Ad Widget

தனியார் ரயில் சேவையை ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்

Thuvarakeswaranகொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

துவாரகேஸ்வரனினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கிற்கான ரயில் சேவையினை மேற்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசும் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி தற்போது கொழும்பில் இருந்து பளைவரை ரயில் சேவை இடம்பெற்று வருகின்றது. விரைவில் தனியார் சொகுசு ரயில் சேவையை நான் ஆரம்பிக்கவுள்ளேன்.

இதற்கான அனுமதியை ஜனாதிபதி, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன வழங்கியுள்ளன.

அதன்படி எதிர்வரும் யூலை மாதமளவில் சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன். எனினும் 2015ஆம் ஆண்டளவிலேயே காங்கேசன்துறை வரையான சேவைகள் பூரணமாக ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் நடவடிக்கைகள் பூர்த்தியானதும் தனியார் சேவை பளைவரையில் சேவை மேற்கொள்ளப்படும். எனினும் கலாச்சார சீர்கேடுகள் எவைக்கும் இடமில்லை. அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் இடைவழியிலேயே இறக்கிவிடப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் குறித்து விரிவாக தெரிவிப்பதில் அரசியல் ரீதியிலும் போட்டியாளர்களாலும் சிக்கல் நிலை உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts