Ad Widget

தனியார் பஸ் சேவை வழமைக்குத் திரும்பியது

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பால் நேற்று திங்கட்கிழமை (27) தடைப்பட்ட தனியார் பஸ் சேவை இன்று செவ்வாய்க்கிழமை (28) வழமைக்குத் திரும்பியுள்ளது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகள், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கிடையில், நேற்று (27) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில், இணைந்த நேர அட்டவணை தொடர்பில் 2 வாரங்களில் தீர்வு பெற்றுத்தருவதாக ஆளுநர் உறுதியளித்ததின் அடிப்படையில் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டு, இன்று முதல் பஸ் சேவை சீராக இடம்பெறுகின்றது.

தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனால் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

எனினும், இந்த அட்டவணைக்கு இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்கவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துடன், இது தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் எட்டப்படவில்லையெனவும் இதனால் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாகவும் சங்கம் கூறியது.

இந்தப் பணிப்பகிஸ்கரிப்பால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்ததுடன், இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் மக்கள் நிரம்பி வழிந்தனர். பணிப்பகிஸ்கரிப்பால் தூர இடங்களுக்கு பணிகளுக்குச் செல்பவர்கள் நேற்று விடுமுறை எடுத்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts