Ad Widget

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிறு விடுமுறை வேண்டும்

ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை வகுப்புக்களை நடத்தவதற்கு ஏதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரி ஜாக்கிராத் சைதன்ய சுவாமிகள் தெரிவித்தார்.

வரலாற்றுச்சிறப்பு மிக்க 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுன்னாகம் தாழையம்பதி அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் ‘தாழையம்பதியான் இசைத்தமிழ்’ இசைப்பேழை இறுவெட்டு வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை (24) இரவு ஐயனார் ஆலய திருவீதியில் ஆலய பரிபாலன சபைத்தலைவர் சி.குமாரவேல் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆசியுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சைதன்ய சுவாமிகள், ‘அறநெறிப்பாடசாலை வகுப்புக்களின் ஊடாக எதிர்கால சிறுவர்கள் இளைஞர்களின் ஆன்மீக சமயநெறியினையும் தமிழினையும் வளர்க்க முடியும். சைவமும் தமிழும் தூய்மையானது. அது ஒவ்வொருவர் மனங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் பஜனைகள் கூட்டுப்பிராத்தனைகள் சொற்பொழிவுகள் நடாத்தப்படவேண்டும். அவ்வாறே ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது அறத்தை வளர்க்கக் கூடிய ஆன்மீக வகுப்புக்களை நடத்த வேண்டும்’ என்றார்.

‘இன்றைய சூழ்நிலையில் யுத்தத்திற்கு பிற்பாடான காலத்தில் சைவமும் தமிழும் சிறப்புற வளர்ச்சியடைந்து வருகின்றது. இளைஞர்கள் இசைப்பேழையினை மதித்து வழிபாடாற்றி பேழையில் ஊர்வலமாக எடுத்து வந்த மதிப்பளித்துள்ளார்கள். எங்களுடைய கலாசார அம்சங்கள் வெளிப்படும் வகையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.

இன்றைய சூழ்நிலையில் எல்லோர் மனதிலும் கவலையும் சோகமும் குடிகொண்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களினை ஆற்றுப்படுத்துவதாகவும் சமய நெறியின்பாற் கொண்டு செல்வதாகவும் இவ்வாறான இசைப்பேழை வெளியிட்டு நிகழ்வுகள் அமைகின்றன. இவ்வாறான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்’ என்றார்.

Related Posts