Ad Widget

தனியான நாட்டை நிறுவும் நோக்கமில்லை, உயர்நீதிமன்றில் த.தே.கூ

TNA-logoஇலங்கை ஒற்றையாட்சி அரசு என்றும் இலங்கைக்குள் தனியான ஒரு நாட்டை நிறுவும் நோக்கம் தமக்கில்லை என்றும் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியக்கடதாசியின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட ஆறு அமைப்புகள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்று புதன்கிழமை ஆராய்ந்த போதே, அவ்விரு கடசிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேற்கண்டவாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கனககேஸ்வரனே சத்தியக்கடதாசியை சமர்ப்பித்தார்.

இலங்கைக்குள் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் உள்ளிட்ட சகல இனங்களும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் சட்டம் சமனானது என்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ரோஹினி மாரசிங்ஹ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த மனுக்களில், பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் அவற்றின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

வடமாகாண சபைக்கான தேர்தலின் போது, இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானபத்தில், இலங்கைக்குள் வேறு ராஜியத்தை நிறுவுவதற்கான நோக்கம் இருப்பதாகவும் இந்த நோக்கம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் மனுதாரர்கள் தங்களுடைய மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் இலங்கை தமிழரசுக்கட்சி வேறு ராஜியத்தை நிறுவுவதற்கு முயற்சிப்பதாக அறிவிக்குமாறும் மனுதாரர்கள் தங்களுடைய மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கனிஷ்க வித்தாரணவும் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான கனகேஸ்வரனும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரிபுள்ளேயும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைகள் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Posts