Ad Widget

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடு!!

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்

தபால் மூல வாக்களிப்பு 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றது. 29ஆம் திகதிக்குள் அவையும் நிறைவு பெறும்.

தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் வாக்களிக்க எதிர்வரும் 31ஆம் திகதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது.

ஏனையோர் ஆகஸ்ட் 05ஆம் திகதி காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க செல்வார் கறுப்பு அல்லது நீல நிற மை பேனா கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதேவேளை தற்போது பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கட்சிகள், சுயேட்சை குழுக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் 2ஆம் திகதியுடன் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் ஆக கூடுதலாக பிரசுரங்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் கிடைக்க பெற்றுள்ளன” என தெரிவித்தார்.

Related Posts