Ad Widget

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் பிரச்சினையில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

vicki-santherasri

‘வடமாகாண ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘ஜனாதிபதியின் அதிகாரத்தினால் ஆளுநர் நியமிக்கப்படுவதால், ஆளுநரின் தீர்மானங்கள் அரசியல் சார்புடையதாக அமைகின்றதுடன், வடமாகாண சபை நிர்வாகத்தை ஆளுநரின் தற்துணிவு அதிகாரம் முடங்கச் செய்கிறது.

ஆளுநரின் இவ்வாறான அதிகாரங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் தீர்மானங்களை உதாசீனம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளன.

தனிப்பட்ட ரீதியில் ஆளுநருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்.

வடமாகாண ஆளுநரின் பின்னணி ஆணை கொடுத்துப் பழக்கப்பட்ட இராணுவப் பின்னணி. ஆகையால், பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களையும், பிரச்சினைகளையும் மக்களின் எண்ணங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை அவர்களிடம் காணப்படவில்லை

இதனால் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்கவேண்டும் என மிக ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றேன்.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபகஷ் ‘வடமாகாணத்தின் முதலமைச்சர் கூட்டங்களில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றாரே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய ஒரு கோரிக்கை எதனையும் இது வரையும் விடுக்கவில்லை’ என்று தெரிவித்திருந்த செய்தியினை ஊடகங்களில் பார்த்தேன்.

வடமாகாணதின் ஆளுநரை நியமிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்ட பின்னரா நியமனம் செய்தீர்கள்? என்ற கேள்வியை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க வேண்டிய தேவையில்லை. தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவேண்டும் என நான் கூறி வருவதினை அரசாங்கம் கேட்கவேண்டிய தேவையிருக்கின்றது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts