Ad Widget

தனிநாயகம் அடிகளாருக்கு யாழ். நகரில் திருவுருவச் சிலை

யாழ். நகரில் உள்ள மடத்தடி (கொன்வென்ற் பாடசாலை அருகில்) அரச மரத்தின் கீழ் தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைக்கப்படும் வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

02 T copy

தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினமாகிய எதிர்வரும் 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் விழாவில் யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் இணைந்து தனிநாயகம் அடிகளின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளனர்.

தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைப்பது தொடர்பாக 08.07.2014 யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் யாழ். மறை மாவட்டத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனிநாயகம் அடிகளாரின் சிலை திறப்புத் தொடர்பாக ஆராயப்பட்டது.

சிலை அமைப்பிற்கான பெரும்பங்கு நிதிப் பங்களிப்பை கனடாவில் உள்ள நெடுந்தீவு ஒன்றியத்தினர் வழங்கியுள்ளனர். சென். பற்றிக்ஸ் சூழலில் உள்ள திருநகரைச் சேர்ந்த சிற்பி சி.ஜெயசீலன் (பாபு) தனிநாயகம் அடிகளாரின் உருவச்சிலையை வடிவமைத்துள்ளார். 6 அடி 3 அங்குல உயரத்தில் நின்ற நிலையில் இச்சிலை ஆக்கப்பட்டுள்ளது.

01 T copy

சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் தனிநாயகம் அடிகள் நினைவுச் சொற்பொழிவு இடம்பெறும். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி நினைவுரையை ஆற்றுவார்.

நிகழ்விற்காகத் தனியான அழைப்பிதழ்கள் அனுப்புவதில்லை எனவும் தமிழியல் ஆர்வலர்கள் யாவரும் இதில் பங்கேற்க முடியும் எனவும் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பவர்கள் தனிநாயகம் அடிகளாருக்கு மலர் வணக்கம் செய்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படவுள்ளது.

Related Posts