Ad Widget

தனிநாட்டுக் கோரிக்கை, மாகாணசபையை இல்லாதொழிக்கும்: விதாரண

democraticதனிநாட்டினை பெறுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளின் மூலம், வடமாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பது மட்டுமல்ல, மாகாண சபைகளை இல்லாது ஒழிப்பதற்காக நடவடிக்கைகளும் இருக்கின்றன’ என்று சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் 2.30 மணியளவில் யாழ். கொசி விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

‘தென்பகுதியில் உள்ள ஏனைய மாகாணங்களில் வாழும் மக்கள் பெற்ற பலன்களை வடபகுதி மக்களும் பெற வேண்டும் என்பதற்காக லங்கா சமசமாஜக் கட்சியினர் உழைத்திருக்கின்றார்கள். அந்த வகையில், இலங்கையில் மீள் இணக்கத்தினை மேற்கொண்டு செல்வதற்கு, வடமாகாண சபை தேர்தல் அருமையான சந்தர்ப்பம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘அதேவேளை, நாட்டில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான தேர்தல் அல்ல வடமாகாண சபை தேர்தல். யார் இந்த நாட்டினை ஆளப் போகின்றார்கள் என்று அறிக்கை விடுவதற்கான சந்தர்ப்பம் இது இல்லை. ஏன் என்றால், இந்த தேர்தல் ஆட்சியை மாற்றி அமைப்பதற்கான தேர்தல் அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘வடபகுதி மக்கள் ஆட்சி முறையில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பமே இந்த வடமாகாண சபை தேர்தலின் நோக்கம் ஆகும். அதேவேளை, வடபகுதியில் பலமான இடதுசாரி அமைப்பினை ஏற்படுத்துவதற்கும், 30 வருடங்களாக நாம் இழந்தவற்றினை மீளப்பெறுவதற்கும், வடமாகாணசபை தேர்தல் நல்லதொரு சந்தர்ப்பம்’ என்றும் அவர் கூறினார்.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பினால், இந்த தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து தான் கவலையடைவதாகவும், வெளி நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்களே தவிர, இங்கு இருக்கும் தமிழர்களின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள் இல்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘அரசாங்கத்துடன், இணைந்து யுத்தத்திற்கு பின்னரான மீள் இணக்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை சமாதானத்திற்கான முயற்சியை தவிர்த்து, மக்களின் நலனுக்காக கதைப்பது குறைவு’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு வடபகுதியை மீட்டு, தனிநாட்டு கோரிக்கைக்கான அறிக்கை விடுவதும், சமாதானத்திற்காக ஈடுபடுவதை தவிர்த்து முரண்பாடாக நடப்பது தவறாகும் என்றும் அவர் கூறினார்.

மாகாண சபையில் உள்ள எந்தவொரு அதிகாரத்தினையும் இழக்காது, தமிழ் மக்கள் ஜனநாயக முறைக்குள் வர வேண்டும் என்பதற்கான அயராது போராடியிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டில் நடைபெறும் அடக்கு முறை ஒடுக்குமுறைகளுக்கு தாம் எதிரானவர்கள் என்றும், இன, மத, சாதி என்ற அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளோம்.

தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக நாட்டின் அசாதாரண பிரச்சினைக்கான தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக செயற்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டில் உள்ள தமிழ், சிங்கள முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Posts