Ad Widget

தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன்

அயல் வீட்டு பசுக்கன்றுக்குட்டி தனது வீட்டு வளவுக்குள் வந்ததாகத் தெரிவித்து இளைஞன் ஒருவர் அதனை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு – கோட்டைக்காடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

33 நாள்களே நிரம்பிய பசுக்கன்றுக்குட்டி துள்ளித்திருந்து வேலியில் இருந்த இடைவெளியால் அயல் வீட்டு வளவுக்குள் சென்றுள்ளது.

அதனைக் கண்ட அயல் வீட்டு இளைஞன் (வயது -19) கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மிருகவதைச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞன் மீது நீதிமன்ற நடவடிக்கை கோரி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் பொலிஸார் இதுதொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அராலி மேற்கு – கோட்டைக்காடு கிராமத்தில் பெரும்பாலனோர் விவசாயிகள். அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்கு விவசாயத்துக்கும் ஆதாரமாக பசு மற்றும் எருது மாடுகளை வளர்ப்போர்.

பட்டிப்பொங்கல் என்றால் கால்நடைகளுக்கு விழா எடுக்கும் கிராமமாக கோட்டைக்காடு பகுதி விளங்குகின்றது. அத்துடன், அமரத்துவமடைந்த உறவுகளுக்கு மாசியம் கொடுக்கு பிதிர்க்கடன் செய்யும் போது, தாம் வளர்த்த கால்நடைகளுக்கும் சேர்த்து பிதிர்க்கடன் கொடுக்கும் வழமையும் அந்தக் கிராமத்தில் உள்ளது.

இவ்வாறான நிலையில் அந்தக் கிராமத்தில் வசிக்கும் இளைஞன் இளம் கன்றுக்குட்டியை கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தமை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

இதேவேளை, மிருக பலிக்கு எதிராக நீதிமன்றம் சென்ற சைவ மகா சபை இந்த விடயத்தில் கவனம் செலுத்துமா என்பது அந்தக் கிராமத்தைச் சேர்ந்தோரின் எதிர்பார்ப்பாகும்.

Related Posts