Ad Widget

தந்தையின் பெயரில்லாதும் பிறப்பு சான்றிதழ் பதியலாம்

birth_certificate“தந்தையின் பெயர் குறிப்பிடாமலும், பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பிறந்த பிள்ளையின் பதிவு செய்யும் உரித்தை யாராலும் தடுக்க முடியாது” இவ்வாறு தெரிவித்துள்ளார் மாவட்டப் பதிவாளர் பி.பிரபாகர்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. அதில் “பல சிறுவர்கள் இன்னமும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே இருக்கின்றனர்.

இதனால் அவர்கள் பாடசாலையில் இணைக்கப்படுகின்றார்கள் இல்லை” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே மாவட்டப் பதிவாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“பிறந்த பிள்ளையின் பதிவு செய்யும் உரித்தை யாராலும் தடுக்க முடியாது. பிள்ளையின் பிறப்புச் சான்றிதழில் கேட்கப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்படா விட்டாலும் ஏனைய பதிவுகளை மேற்கொண்டு பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

பிறப்புச் சான்றிதழ் பதிவில் தாயின் பெயர் பதிவில் பிரச்சினை இல்லை. தந்தையின் பெயர் பதிவு செய்யப்படும் போது, தந்தை நேரில் வர வேண்டும், இல்லாவிட்டால் திருமணப் பதிவுச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாத சந்தர்பங்களில் தந்தை யார் என்று தெரியாவிட்டால் அதனைக் குறிப்பிடாமல் பதிவு செய்து கொள்ள முடியும். தந்தையின் பெயருக்குரிய பகுதி வெற்றிடமாக இருக்கும்.

பதிவுச் சட்டத்தின் 27(ஏ) பிரிவின் கீழ், தந்தையின் பெயர் பதியாமல் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில், தந்தை நேரில் சென்று தனது பெயரை உட்புகுத்த முடியும்.

அல்லாவிடின் நீதிமன்ற பணிப்புக்கு அமைய தந்தை இனங்காணப்படும் போது அவரது பெயரை உட்புகுத்த முடியும். எனவே தந்தையின் பெயர் இல்லை என்பதற்காக பிறப்புச்சான்றிதழ் பதிவு செய்யாமல் விடமுடியாது.

தற்போது இறப்பு பிறப்புக்கான பதிவுகள் அதிகரிக்கப்பட்ட கட்டணத்துக்கு அமைவாக அவை மேற்கொள்ளப்படுகின்றன. பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரகாலத்தினுள் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts