Ad Widget

தடுப்பூசி கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென உறுதியாகக் கூற முடியாது; அதுவரை யாருக்கும் எங்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான் உலகம் முழுவதும் இந்த தொற்றின் பரம்பலைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது இன்னமும் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எனவே அதுவரை யாருக்கும் எங்கும் இத்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்பதே இன்றைய நிதர்சனம்”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு தின அரச உத்தியோகத்தர்களின் உறுதி உரை எடுக்கும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் அழைப்பின் பேரில் அவர் இந்தச் சிறப்புரையை வழங்கினார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தனது உரையில் தெரிவித்ததாவது;

முதற்கண் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.

கடந்து செல்லும் 2020ஆம் ஆண்டு மனிதகுல வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய ஆண்டாக பதிவுசெய்யப்படுகின்றது. 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கோரோனா பெருந்தொற்று ஒருவருட காலத்திற்குள் ஒட்டுமொத்த உலகையே புரட்டிப் போட்டிருக்கின்றது. ஆட்டிப் படைத்த வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது. பெரும் மனிதப் பேரவலங்களையும், மோசமான சமூகப் பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை உலகில் 83.9 மில்லியன் மக்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1.82 மில்லியன் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் இன்றுவரை 43 ஆயிரத்து 856 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 208 பேர் உயிரிழந்துள்ளனர். வடமாகாணத்தில் 238 பேருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 175 பேர் தொற்றுக்குள்ளானதுடன் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை.

இந்தப் பட்டியல் தொடர்ந்து நீண்டு செல்கின்றது. அண்மைக்கால மனிதகுல வரலாற்றில் ஏற்பட்ட மாபெரும் பேரவலமாக இது கருதப்படுகின்றது. பல உலகப் போர்களில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட பன்மடங்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணியுள்ளது. பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. உலகின் பல நாடுகளில் தற்போது தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இன்றுவரை உலகம் முழுவதும் 29 நாடுகளில் 10 மில்லியனிற்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக வயது முதிர்ந்தவர்களுக்கும், நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் கோவிட் -19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றது.

ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த இலக்கை அடைந்தால்தான் உலகம் முழுவதும் இந்த தொற்றின் பரம்பலைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது இன்னமும் உறுதியாகக் கூற முடியாதுள்ளது.

எனவே அதுவரை யாருக்கும் எங்கும் இத்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்பதே இன்றைய நிதர்சனம். உலகின் பல வல்லரசு நாடுகளின் தலைவர்களே இந்த நோயின் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் எங்கும், யாருக்கும் எவ்வேளையிலும் தொற்று ஏற்படலாம். எனவே இத்தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வது எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

எம்மையும் எமது குடும்பத்தையும் சமூகத்தையும் இத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.

மூன்று அடிப்படையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைப்பிடித்தால் நாம் எம்மை முழுமையாக பாதுகாத்துக்கொள்ளலாம்.

  1. முகக் கவசங்களை சரியான முறையில் அணிதல்.
  2. இரண்டு பேருக்கிடையில் ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுதல்.
  3. அடிக்கடி சவர்க்காரம் அல்லது கைகளுவும் திரவத்தினைப் பயன்படுத்தி ஓடும் நீரில் 20 செக்கன்கள் கைகளை நன்றாக கழுவுதல். குறிப்பாக வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியவுடன், அலுவலகங்கள், கடைத்தொகுதி, பொது இடங்களுக்கு உட்புக முன்
    இந்த மூன்று விடயங்களையும் முறையாகக் கடைப்பிடித்தால் உங்கள் முன் கோரோனா தொற்றுள்ளவர் இருந்தாலும் உங்களை முற்றாக பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதற்கு மேலதிகமாக சில விடயங்களை நாம் பின்பற்றுவது நல்லது.

  1. இயலுமானவரை பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளைத் தவிர்த்தல் நல்லது.
  2. அவசரமற்ற விழாக்கள், ஒன்றுகூடல்களை அல்லது வைபவங்களை பிற்போடலாம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோருடன் நடாத்தலாம்.
  3. ஓவ்வொரு நிறுவனத்தின் வாயிலிலும் உள்ளே வருபவர்களின் வெப்பநிலையை அறவிடுங்கள்.
  4. ஓவ்வொரு நிறுவனத்திற்கும் வந்து செல்பவர்களின் விவரங்களை பதிவு செய்யுங்கள்.
  5. கோரோனா தொற்று பரம்பல் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
  6. காய்ச்சல், இருமல், தொண்டை நோ மற்றும் ஏதாவது நோய் அறிகுறிகள் உடையவர்கள் பொது இடங்களுக்கு அல்லது அலுவலகங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
  7. உங்களுக்கு தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு சந்தேகமிருப்பின் வைத்தியசாலைக்குச் சென்று உங்களை இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம்.
  8. உங்களுக்கு இந்நோய் பற்றிய ஏதாவது தகவல்கள் பெறவேண்டுமாயின் அல்லது நீங்கள் தகவல்களை வழங்க விரும்பினால் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் 24 மணிநேர அவசர அழைப்பெண்ணான 021 222 6666 என்கின்ற இலக்கத்தினை தொடர்புகொள்ள முடியும்.

எனவே இத்தொற்றிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள மேற்படி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குங்கள். மலர்ந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்த திடசங்கற்பமுறுவோம் – என்றார்.

Related Posts