Ad Widget

தங்களுக்கான தீர்வு இனியும் கிடைக்காவிடின் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக உறவுகள் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை தலைமையில், யாழ்ப்பாண அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை முன்னிறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் சர்வதேசத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தில்தான் தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் என்றும் ஆகவே சர்வதேசம்தான் இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் காணாமல்போன தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கையை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முன்வைத்தனர்.

அத்துடன் இதற்கு பின்னரும் தங்களுக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால், கடலினுள் மூழ்கி உயிரை விடுவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில காலங்களாக ஒவ்வொரு 30ஆம் திகதியும் மேற்கொள்கின்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related Posts