Ad Widget

தகுதியில்லாதவர்கள் அரசியல் செல்வாக்குடன் பணியாற்றுகின்றனர் – முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன்

கடந்த காலங்களில் உரிய பதவிகளுக்கான தகுதிகளை கொண்டிராத பலர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்களை பெற்றுக்கொண்டார்கள். பல பதவிகளில் உரிய கல்வித்தகைமைகளை கொண்டிராத பலர் கடமையாற்றுகின்றார்கள் என்பதை நாம் 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை ஆட்சிக்க வந்த பின்னர் அறியக்கூடியதாகவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய 200 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து அங்கு கூறுகையில்,

‘கடந்த காலங்களில் நீங்கள் எல்லாம் வேறு அரசியல் கட்சிகளினால் நியமனம் செய்யப்பட்டு இருந்தீர்கள். ஆனால், நாங்கள் உங்களை நிறுத்த வேண்டும் என்று சிந்திக்கவில்லை. இதன் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன என்பதை உணர்ந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்.

உரிய கல்வித் தகைமைகளின் அடிப்படையில் தெரிவுகள் செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுவது இல்லாது போய்விட்டது. அரசியல் கட்சிகளின் செல்வாக்கின் அடிப்படையில் பதவிகளை பெற்றுக் கொண்டதினால் அரசாங்க அலுவலர்கள் தாங்கள் சேவையிலும் பார்க்க தமக்கு பதவிளை தந்த அரசியல்வாதிகளுக்கு தொண்டாற்ற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

இத்தகைய நிலைமை அரச ஊழியர்களிடையே காணப்படக்கூடாது. கடந்த காலத்தில் அரசாங்கத்தினுடையது என்ற எண்ணத்தில் நாம் பலதையும் சுருட்டிக் கொண்டோம். இன்று அத்தகைய எண்ணம் இருக்கக்கூடாது.

மக்களுடைய பிரதிநிதிகளைக் கொண்ட சபை காணப்படுகின்றது. இங்கு எதனையும் சுருட்டி செல்லலாம் என்று யாரும் கருதக்கூடாது. எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் அரச ஊழியன் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டியதும் அவசியமாகும்’ என்றார்

Related Posts