டெனிஸ்வரனின் நடவடிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கட்சியின் கட்டளை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பிலான நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ” வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்தை நான் நினைத்துப்பார்க்கின்றேன். தனது கட்சியின் கட்டுப்பாட்டுடன் இணைந்து செயற்பட்டமையினால் இன்று வரை அவரை கட்சி ஒரு போதும் கை விடாத வாய்ப்பினை பெற்றுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உயர் மட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் கூட இருக்கின்றது.

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக நாங்கள் முடி எடுக்க வேண்டியுள்ளது. அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம்.

எங்களைப் பொறுத்த மட்டில் அமைச்சர் டெனிஸ்வரன் ஊழல் செய்திருக்கின்றார். அவர் நிறைய கையாடல் செய்திருக்கின்றார். மாகாண சபை அமைச்சரவையில் துஸ்பிரயோகம்செய்திருக்கின்றார் என்ற கருத்திற்கு எங்களுடைய கட்சியைப் பொருத்தமட்டில் இடமில்லை.

ஆனால் அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான நோக்கம். நாங்கள் எழுதிய கடிதத்தில் ஊழல் தொடர்பிலும், அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பிலும் எதுவும் இல்லை.

டெலோவின் தலைமைக்குழு கடந்த வாரம் கூடிய போது அமைச்சர் டெனிஸ்வரன் கலந்து கொண்டு விளக்கத்தையளித்தார். அவரிடம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சி கோரியிருந்தது. ஆனால் தனக்கு ஒரு நாள் அவகாசத்தை கோரியிருந்தார்.

அவருடைய கோரிக்கைக்கு அமைவாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்கள் மூலமாக தான் சுய விருப்பத்துடன் பதவி விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக ஒரு செய்தியை சொல்லி இருந்தார். கட்சி எனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியிருக்கின்றார்.

டெனிஸ்வரன் இந்த விடையத்தில் அதுவும் கட்சி கூறியதை கேட்டிருந்தால் கடைசி வரைக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அவருடன் நின்றிருக்கும் என நான் தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.

Related Posts