Ad Widget

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை

உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது ‘டெங்கு வெக்சியா’ என இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு, முதன்முறையாக உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் தென்கிழக்கு ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தடுப்பூசி 70 வீதம் வெற்றியளித்துள்ளன.

மெக்சிக்கோ, பிறேசில், எல்சல்வடோர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதைக்கடந்த ஒருவருக்கு வருடத்திற்கு மூன்று தடவைகள் இந்த தடுப்பூசியை ஏற்றமுடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என அநுர ஜயவிக்கிரம மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களில் இலங்கையில் டெங்கு காய்ச்சலால் 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts