Ad Widget

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி!

பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது.

அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன என்றும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வடக்கு அபிவிருத்தி அமைச்சும் வழங்கப்படக்கூடும் என்று அறியமுடிகின்றது.

வரவு- செலவுத்திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக்கொண்ட நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியமைப்பு திருத்தங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கிலேயே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

எனினும், அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுமா? அல்லது அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதெல்லாம் தைப்பொங்கலுக்கு பின்னரே தெரியவரும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன

Related Posts