Ad Widget

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு

யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதன் போது உடன் சென்றிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து ஒவ்வொரு லொறிக்கும் தலா 5000 ரூபா அறவிட்டதாகவும், ஒவ்வொரு பயணத்துக்கும் சுமார் 300 ரூபா அறவிட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாக கடந்த ஐந்து, ஆறு மாதங்களாகக் கூறிவருகின்றபோதும் பணம் எதுவும் திருப்பி வழங்கப்படவில்லையென யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சங்கத்தின் லொறிகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மகேஸ்வரி நிதியமும் இணைந்து மண் அகழ்வுக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த காலங்களில் மக்கள் அச்சம் காரணமாக மெளனமாக இருந்தனர். தற்பொழுது முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளனர் என்றார்.

Related Posts