Ad Widget

ஜ.நா. விசாரணைக்கான ஆவணங்களை நாம் மிக வேகமாக சேகரிக்க வேண்டும்! – மாவை

mavai mp inதென்னிலங்கை முற்கோக்கு சக்திகளுடன் இணைந்து இந்த சர்வாதிகார மஹிந்த அரசை விழுத்துவதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்ய வேண்டும்.
அதேபோன்று தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற அரசியல் தீர்வைப் பெற நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, ஜ.நா. குழுவின் விசாரணைக்காக ஆவணங்களை நாங்கள் மிக வேகமாக சேகரிக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) 34 ஆவது சிறப்பு மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர், தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் –

“இந்த மாநாடு மிகவும் முக்கியமான கால கட்டத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்படப் பல இயக்கங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடின. அதேவேளை, இந்த இயக்கங்களைச் சேர்ந்த எத்தனையோ ஆயிரம் பேர் தங்களுக்குள்ளே போராடி மடிந்து போனார்கள் என்பது மிகவும் துயரமான செய்தி.

முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தாம் வென்று விட்டோம் என்று மஹிந்த அரசு மார்தட்டிக்கொள்ளுகின்றது. எங்களுடைய தமிழ் சமூகத்தைப் பார்த்து தோற்றுப்போன சமூகம் என்று இந்த அரசு சொல்கின்றது. எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த அத்தனை போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும், எங்களுடைய மரியாதையையும், அனுதாபத்யையும் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

எங்களுடைய உறவுகள் இன்று ஜனநாயக வழியில் எங்களுடைய மண்ணின் விடுதலைக்காக மீண்டும் எழுந்து போராடுகின்றார்கள் என்பதை கடந்த 5 ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றோம்.

முள்ளுக்கம்பி வெளிக்குப் பின்னால் நின்றிருந்தும் எமது மக்கள் அரசுக்கு எதிராகப் போராடினார்கள். மேலும் ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தார்கள்.

அதனைவிட மாகாண சபைத் தேர்தலிலும், அரசுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் எமது மக்கள் வாக்களித்தனர். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் மற்றும் அரசின் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், தாக்குதல்கள் என்பவற்றுக்கும் மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வரலாறு காணாத வெற்றியடைய வைத்தார்கள் எமது தமிழ் மக்கள்.

இந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்று முஸ்லிம் மக்களும், சிங்கள முற்போக்கு சக்திகளும், மலையகத் தமிழர்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். இந்நிலையில், இராணுவத்தின் அடக்குமுறைக்குள இருக்கின்ற தமிழ் மக்களுடன் அடக்கப்படும் அனைவரும் ஒரே அணியில் திரளக்கூடிய சக்தியாக மாறக்கூய வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அது சர்வதே அரங்கில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இந்த சர்வாதிகார மஹிந்த அரசை விழுத்துவதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்ய வேண்டும்.

அதேபோன்று தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற அரசியல் தீர்வைப் பெற நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, ஜ.நா. குழுவின் விசாரணைக்காக ஆவணங்களை நாங்கள் மிக வேகமாக சேகரிக்க வேண்டும்.

குறிப்பாக காணி சுவீகரிப்பு, மக்களுடைய மீள்குடியேற்றம், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது படைத்தரப்பினால் மேற்கொள்ளப்படும் பாலியல் கொடுமை, புதிதாக அமைக்கப்படும் இராணுவ முகாங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை நாம் திரட்ட வேண்டும்” – இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Related Posts