Ad Widget

ஜோசப் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டுத்தாருங்கள்!

“காயமடைந்த நிலையில் மக்களுடன் வந்த எனது கணவரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்றதைக் கண்டபோதும் தற்போது அவர் இல்லை என மறுக்கின்றனர். எனது கணவரை வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என நான் கருதுகின்றேன். எனவே, எனது கணவரை மீட்டுத்தாருங்கள்”

Capture

– இவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த காந்தியின் மனைவி பிரபாகினி ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக கதறியழுதவாறு சாட்சியமளித்தார்.

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“16.05.2009 அன்று காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்ற ந.மகேஸ்வரன் என்னும் இயற்பெயரையும் காந்தி என்னும் இயக்கப் பெயரையும் உடைய எனது கணவரை வவுனியா வைத்தியசாலையில் எனது நண்பர்கள் கண்டபோதும் தற்போது அவர் இல்லை என இராணுவத்தினர் மறுக்கின்றனர் .

எனது கணவர் வேறு சிலர் மூலம் அன்றைய தினம் எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். அதாவது நான் காயத்துடன் சரணடைந்து தற்போது வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளேன் என்ற தகவலை கணவர் அனுப்பியிருந்தார்.

அந்தவேளையில், நான் செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் இருந்தமையினால் உடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்பு வெளியில் வந்து பல இடத்திலும் தொடர்பு கொண்டபோதும் எனது கணவரைக் காட்டவே இல்லை.

இந்தநிலையில், 2009ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சையின் பொருட்டு இவரை இராணுவம் அழைத்து வந்தநேரம் எனது உறவினர்கள் சிலரும் நேரில் கண்டுள்ளனர்.

எனவே, இவரை வவுனியா ஜோசப் இராணுவ முகாம் பகுதியில் தடுத்துவைத்துள்ளனர் என நான் கருதுகின்றேன். இரு பிள்ளைகளுடன் சிரமப்படும் எனக்கு எனது கணவரை மீட்டுத்தாருங்கள்” – என்றார்.

Related Posts