மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கு இனந்தெரியாதோர் சிலர் தீ வைத்து சேதப்படுத்த முயற்சித்துள்ளனர் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் நாளை மறுதினம் (25) புதன்கிழமையன்று மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவினால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் இன்று (23) திங்கட்கிழமை அதிகாலை 1.40 மணியவில் அந்த அலுவலகத்திற்கு முன்னால் இனந்தெரியாத சிலர் டயர் ஒன்றை போட்டு தீ வைத்துள்ளனர்.
அலுவலக திறப்பு விழாவுக்கு விளம்பர போஸ்டர்கள் ஒட்டிவிட்டு அலுவலகத்திற்கு வந்த போது டயர் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டேன். பின்னர் அதை அணைத்து விட்டேன். இதனால் எந்தவொரு சேதமும் அலுவலகத்திற்கு ஏற்படவில்லை. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொலைபேசியில் கூறினேன்.
பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த அலுவலகத்திற்கு பொலிஸார் இருவரை பாதுகாப்பு கடமையிலும் நியமித்துள்ளனர்.
திட்டமிட்டபடி எதிர்வரும் புதன்கிழமை (25) அன்று அலுவலகம் திறந்து வைக்கப்படுமென றஊப் மேலும் தெரிவித்தார்.